×

“அதிமுக விலகியதில் சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை” 2024 தேர்தலில் திமுக Vs பாஜக போட்டி: அண்ணாமலை பேட்டி

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் 11.55 மணிக்கு அண்ணாமலை வருகை தந்தார். கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை; வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி. என் மீது யார் குற்றம்சாட்டினாலும் நான் அதை பொருட்படுத்துவதில்லை. 2024 தேர்தல் முடிவில் மக்களுடைய ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து சென்றதற்காக நான் வருத்தப்படவில்லை. ஒரு கட்சி வெளியேறியதால் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்றாகி விடாது. பாஜக வலிமையடைய வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய நோக்கமாக உள்ளது. 2024 தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்பி வைக்கும்.

பாஜகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்திச் செல்கிறோம். நாங்கள் யாருடன் சண்டை போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இவர்கள் இல்லாமல் வெற்றி பெற முடியும், அவர்கள் இல்லாமல் வெற்றி பெற முடியும் என்பதை தேர்தல் களம் முடிவு செய்யும். பிரிந்து செல்பவர்கள் பற்றி கவலையில்லை. எந்த பாதையில் பாஜக செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்.டி.ஏ. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன; நிறைய கட்சிகள் போயிருக்கின்றன. அதிமுகவின் விமர்சனத்துக்கு 2024 தேர்தலில் பதில் கிடைக்கும்.

ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது பாஜக, மாநிலத்தில் ஆட்சியில் இருப்பது திமுக; அதனால் திமுக-பாஜக இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் இவ்வாறு கூறினார்.

The post “அதிமுக விலகியதில் சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை” 2024 தேர்தலில் திமுக Vs பாஜக போட்டி: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : ADMK ,DMK ,BJP ,2024 elections ,Annamalai ,Chennai ,president ,2024 parliamentary elections ,State ,
× RELATED தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது